.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

18.12.11

அந்த நாட்களில்....

 بسم الله الرحمن الرحيم


இஸ்லாம் அழகிய முறையில் பெண்களுக்கான சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று மாதவிடாய் [பீரியட்ஸ்] சமயத்தில் பெண்களுக்குண்டானவைகள்..

மாதத்தில் 1 வாரம் அல்லது 3, 4 நாட்கள் வந்து செல்லும்  மாதவிடாய்காலத்தில் அவளை தனித்து வைத்திருக்கவோ! தீண்டப்படாதவளாக கருதவோ சொல்லவில்லை. மாறாக அச்சமயத்தில் அவளுக்கு ஆறுதலாய் பலவிசயங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இதுதான் இஸ்லாத்தின் மாண்பு. மாதவிடாய் வந்த பெண்ணொருத்தி என்னென்ன சிரமங்களுக்கு ஆளாகுவாள் அந்த சமயத்தில் அவளால் எது முடியாதோ அதை தடுத்தும். எது முடியுமோ அதை செய்யவும் வலியுருத்துகிறது.

சிலயிடங்களின் மாதவிடாய் வந்தபெண்கள் தனித்துவிடப்பட்டு அந்த நாட்கள் மட்டும் தீண்டத்தகாதவள்என கருத்தபடுகிறாள். அவள் அதைத்தொடக்கூடாது இதைதொடக்கூடாது என்றும் அவள் தொட்ட அனைத்தும் தீட்டு [[பண்ட பாத்திரங்கள் உள்பட]எனவும்.இன்னும் பல மூடநம்பிகைகளும் சேர்த்து புறக்கணிப்படுகிறாள்.

மாதவிடாய் என்பது உடல்ரீதியாய் உண்டான ஒரு கழிவு. அது வெளியேறவில்லையென்றால் உடலுக்கு கேடு. இதை உணர்ந்துதான் இஸ்லாம் அதற்க்குண்டான தீர்வை சொல்லியிருக்கிறது.

தொழுவது நோன்பு நோற்பது கஃபாவை வலம் வருவது தாம்பத்தியம் கூடுவது இந்த ஐந்து காரியங்கள் மட்டுமே அவளுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.”
(அல்குர்ஆன் 56:79)


பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 2:222)

மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ”ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு ‘மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள்.
(நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)

அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.

மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் :
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.

”நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.” (நூற்கள்: புகாரி, அபூ தாவூது)

ஆகவே மாதவிடாய் காலங்களில் தவிர்க்கவேண்டியவைகளை தவிர்த்து சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து
இறைவன்கூறியபடியே நடக்க எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நல்லதின் பக்கம் நம்மனங்களையும் முகங்களையும் திருப்புவானாக!

மாதவிடாய் ஏற்படும்போது கடைபிடிக்கவேண்டிய  சில குறிப்புகள்.

முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.

அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்­ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.

ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்:

பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீ­ர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.

மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீ­ரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்­ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.

மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

20.10.11

கொடுங்கள் குறையாது!

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால்




தர்மம் செய்வது தலை சிறந்தது.
இறைவன் தனது திருமறையில் கூறுகிறான்.

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274) 

  அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்" (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)

தர்மம் செய்வதில் கஞ்சத்தனம் கூடாது
இரகசியமாக தர்மம் செய்தல்.
பகிரங்கமாவும் தர்மம் செய்தல்.
தாராளமாக தர்மம் செய்தல்.
இருப்போர்கள் இல்லாதோருக்கு வாரிவழங்குதல் என தர்மங்களை தாளரமாக வழங்கவேண்டும்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்."  
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுவார். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
 ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

தவித்தநேரத்தில் தாகம் தீர்ப்பதும் தர்மம்  அதிகமதிகம் தர்மங்கள் செய்து இம்மைக்கும் மறுமைக்குமான நன்மைகளை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக..

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..

8.6.11

நம்பிக்கைகொண்டோருக்கு..


بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால் .

உறங்கும் முன் ஓதும் துஆ

اللهم با سمك أمو ت و ا حيا

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா.
பொருள்: 
இறைவா!
உன் பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்,
உயிர் பெறுகிறேன்.
நூல் புகாரி
 --------------------------------------------------------------------

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி),  
ஆதாரம் : புகாரி. 

 இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

இந்த வலைப்பதிவில் தேடு

Loading...