.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

அந்த நாட்களில்....

| |

 بسم الله الرحمن الرحيم


இஸ்லாம் அழகிய முறையில் பெண்களுக்கான சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று மாதவிடாய் [பீரியட்ஸ்] சமயத்தில் பெண்களுக்குண்டானவைகள்..

மாதத்தில் 1 வாரம் அல்லது 3, 4 நாட்கள் வந்து செல்லும்  மாதவிடாய்காலத்தில் அவளை தனித்து வைத்திருக்கவோ! தீண்டப்படாதவளாக கருதவோ சொல்லவில்லை. மாறாக அச்சமயத்தில் அவளுக்கு ஆறுதலாய் பலவிசயங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இதுதான் இஸ்லாத்தின் மாண்பு. மாதவிடாய் வந்த பெண்ணொருத்தி என்னென்ன சிரமங்களுக்கு ஆளாகுவாள் அந்த சமயத்தில் அவளால் எது முடியாதோ அதை தடுத்தும். எது முடியுமோ அதை செய்யவும் வலியுருத்துகிறது.

சிலயிடங்களின் மாதவிடாய் வந்தபெண்கள் தனித்துவிடப்பட்டு அந்த நாட்கள் மட்டும் தீண்டத்தகாதவள்என கருத்தபடுகிறாள். அவள் அதைத்தொடக்கூடாது இதைதொடக்கூடாது என்றும் அவள் தொட்ட அனைத்தும் தீட்டு [[பண்ட பாத்திரங்கள் உள்பட]எனவும்.இன்னும் பல மூடநம்பிகைகளும் சேர்த்து புறக்கணிப்படுகிறாள்.

மாதவிடாய் என்பது உடல்ரீதியாய் உண்டான ஒரு கழிவு. அது வெளியேறவில்லையென்றால் உடலுக்கு கேடு. இதை உணர்ந்துதான் இஸ்லாம் அதற்க்குண்டான தீர்வை சொல்லியிருக்கிறது.

தொழுவது நோன்பு நோற்பது கஃபாவை வலம் வருவது தாம்பத்தியம் கூடுவது இந்த ஐந்து காரியங்கள் மட்டுமே அவளுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)

நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.”
(அல்குர்ஆன் 56:79)


பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 2:222)

மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ”ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு ‘மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள்.
(நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ)

அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை.

மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் :
மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள்.

”நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.” (நூற்கள்: புகாரி, அபூ தாவூது)

ஆகவே மாதவிடாய் காலங்களில் தவிர்க்கவேண்டியவைகளை தவிர்த்து சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து
இறைவன்கூறியபடியே நடக்க எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நல்லதின் பக்கம் நம்மனங்களையும் முகங்களையும் திருப்புவானாக!

மாதவிடாய் ஏற்படும்போது கடைபிடிக்கவேண்டிய  சில குறிப்புகள்.

முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.

அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்­ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.

ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்:

இளக்கொழுந்து வேப்பில்லை ஒரு கைப்பிடி, பசும்பால் ஒரு கப், வேப்பிலையை மையாக அரைத்து அதனை காய்சாத பசும்பாலில் கலக்கி ,மூக்கை பொத்திக்கொண்டு மாதவிடாய் வந்த முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் காலை, வெரும் வயிற்றில் குடித்தால் அந்த நாள் வலி வராது .

பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீ­ர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.

மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீ­ரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்­ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.

மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

4 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

பெண்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவைகள். அருமையான பகிர்வு.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ மலிக்கா....
பலரும் எழுத தயங்கும் விசயத்தை அழகாக,மார்க்க விளக்கங்களுடன் எழுதியிருக்கிறீர்கள்...

அல்லாஹ் உங்களது அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.//

//அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.//
இந்த வரி,அத்தனை பொருத்தமாக இல்லை என நினைக்கிறேன்...
மாதவிடாயின் போது பெண்கள் தொழுகை நோன்பு, தவாஃப் போன்ற வணக்கங்களை செய்ய வேண்டாம் என்பதற்கு இரு காரணங்கள்/
ஒன்று:மாதவிடாயின் போது அசுத்தம் வெளியேறுவதால் அவர்கள் தூய்மையாக முடியாது.தூய்மையின்றி வணக்க வழிபாடுகள் இல்லை என்பதாலும் அந்த உபாதை காலங்களில் அவர்கள் அதற்காக சிரமப்படாமலும் இருக்க அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது...

இரண்டு: எந்த சூழலிலும் தொழுகையை, நோயாளியாக இருப்பினும் படுத்துக்கொண்டு தொழுகச் சொல்லும் மார்க்கம்...மாதவிடாய் என்பது பெண்களுக்கான ஓர் உபாதை..இந்த உபாதையை கருதி,இதில் முழுமையான சலுகையை வழங்கி இருக்கிறது....

ஆக இதை சலுகை என முன்னிலைப்படுத்துவதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

அன்புடன்
ரஜின்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......
அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....
புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்

Unknown said...

ஸலாம்

தெரியாம வந்துட்டேன் உங்கள் ப்ளாக் கு .. நானும் ப்ளாக் ஓபன் பண்ணிருக்கேன் .. கட்டுமானப் பணியில் உள்ளது .. முடிந்தவுடன் நம் ப்ளாக் கு வரவும் ..

இன்ஷா அல்லாஹ்

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது நிறைகுறைகளை சரிபார்க்கலாம். பகிந்துகொள்ளுங்களேன் கருத்துக்களை
நானும் என்னை சரிசெய்து கொள்கிறேன் .
பிடிதிருந்தால் ஓட்டும் போடுங்கள்

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..