.

வருகை புரியும் அனைவர்மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் அளவில்லாமல் கிடைக்கட்டும் Photobucket

சபித்தல்.சாபமிடுதல்...

| | 8 comments

بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.


முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்
[அல்-அஹ்ஸாப்: 70, 71].


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”.
[அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி].


ஒருவரை ஒருவர் சபிப்பதும், [அதாவது] சாபமிடுவதும் வெருக்கத்தக்க செயலாகும்.
கோபமோ! ரோசமோ!.ஆத்திரமோ! தலைக்கேறும்போது என்ன பேசுகிறோமென அறியாமல் வார்த்தைகளை கொட்டித் தீர்த்துவிடுவது. நாவை அடக்கத்தெரியாமல் ஆத்திரத்தின்மேல் சபிப்பதும் சாபமிடுவதும்.பாவச்செயல்.

வரம்பு மீறி வீசப்படும் வசைமொழிகள் இருக்கிறதே அது அணுகுண்டைக் காட்டிலும் ஆபத்தானது; ஏவுகணையைக் காட்டிலும் நாசம் விளைவிக்கக் கூடியது. சிலர் கடுமையான வார்த்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கக்கி விடுவார்கள். கணநேர ஆத்திரம் அவர்களின் கண்களை மறைத்து விடும். அதன் பின்னர் அவர்கள் அறியாமல் சொன்னதை நினைத்து மனம் வருந்துவார்கள்.

இதில் வேதனையான விசயம்.தன் சொந்தக் குழந்தைகள். தன் கணவன். தன் மனைவி. தாய் தந்தை. என யாரையும் விட்டுவைப்பத்தில்லை அந்த கோபத்தினால் உண்டாகும் சாபவார்த்தைகள்.இது எந்தளவுக்கு ஆபத்து நிறைந்த தீமையான விசயம் என அறியாமல் செய்வதுதான் வருந்ததக்க ஒன்று.

அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிராத்தித்தவனாகின்றான். [அஸ்தஹ்பிர்ல்லாஹ்].

சட்டென எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் கோபப்படுவதும். அதை ஆய்ந்து ஆராயாது.உண்மையறியாது சபிப்பதும்.சாபமிடுவதும் ஈருலகிற்க்கும் தீமையே.

பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

எனவே நம்முடைய எந்த நிலையிலும். யாரையும் சபிக்கவோ சாபமிடவோ கூடாது. அநீதி இழைத்தவன் அதன் கூலியை பெறுவான்.
அநியாயம் செய்தவன் அதன் பலனை அடைவான்.
நம்மை நாம் பேணிக்கொள்ளவேண்டும் முக்கியமாக நாவை.அதை எந்நிலையிலும் பேணிக்காக்கத்தவறி நரகத்தின் பக்கம் இழுத்துசென்றுவிடாதிருக்க மிக கவனமாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர்.
[அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

இறைவன் நம் அனைவருக்கும் தீமையிலிருந்து பாதுகாப்பளித்து நன்மையின் பக்கமே நம்மை அழைத்துசெல்வானாக.  ஆமீன்..


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்..
அன்புடன் மலிக்கா.

வேண்டுகோள்..

இங்கே பதியப்படும் அனைத்தும், நான் என்னை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். ஈருலக வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ளவும். தொடங்கியுள்ள பயணம். அதில் தாங்களும் தெரிந்துகொள்வதில் பெருமிதம். ஆனால் இதை தவறானமுறையில் விளங்கிக்கொண்டு வீணான விவாதங்களோ தர்க்கங்களான கருத்துக்களாகவோ அமைத்துவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..