بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புனையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்...
.
15-உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைக்கற்ப்பிக்கும்படி உன்னைக்கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு கட்டுப்படாதே!இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமைகொள் என்னை நோக்கி திரும்பியோரின் வழியைபின்பற்று!
பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது.
நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்..
17-எனது அருமை மகனே!
தொழுகையை நிலைநாட்டு!
நன்மையை ஏவு! தீமையை தடு! உனக்கு ஏற்படுவதை சகித்துக்கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
27-வீண் விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் பாகம்:15 17.பனூ இஸ்ராயில்
29-நம்பிக்கைக்கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு
நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு.
அல்குர்ஆன் பாகம்:13 13.அர்ரஃது
ஒரு குழந்தை பிறந்ததும் அதை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும்.தைரியத்துடனும் வளர்க்கவேண்டியது பெற்றோரின்
முக்கிய கடமை!
ஏதோ பெற்றுவிட்டோம் வளர்த்துவிட்டோம் கடமைமுடிந்தது என நினைப்பது பெற்றோர்களின் நல்ல குணமல்ல. குழந்தை ஒவ்வொரு செயல்களிலும் பெற்றொர்களின் பங்கு நிச்சயம் பூர்த்தியாக இருக்கவேண்டும்.
வளரும் சூழ்நிலையில் குழந்தைக்கு தானே தன்னை பாதுகாத்துக்கொள்வதையும் தன்னால் பிறரை பார்த்துக்கொள்வதையும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலும் தூண்டுகோலாக இருக்கவேண்டும். முக்கியமாக ஆண்குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் போது பொறுப்புகள் அவர்களின் தலையில் தானாகவே வந்துவிழும் அதை சமாளிக்கும் திறனை வளர்த்துவிடவேண்டும். சோதனைகள் வரும்போது அதை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்கிவிடவேண்டும்.
ஆண் வளரும்போது சுமைகளும் வளர்கிறது. பள்ளியில் புத்தகச்சுமை. கல்லூரியில் காதல் சுமை. படிப்புசுமை.அதுமுடிந்ததும் வேலைதேடும் சுமை. வேலைகிடைத்திலிருந்து குடும்பச்சுமை. அடுத்து திருமணச் சுமை அடுத்து தன்குடும்பச்சுமை. குழந்தைகள் சுமை என சுமைகளின் பயணம் அவனை தொடர்ந்துகொண்டேயிருக்கும் அத்தனை சுமைக்கும் அவன் ஈடுகொடுக்க பணச்சுமையைத்தேடி ஓடனும். அதாவது ஓடி ஓடி உழைக்கனும்..அதுவும் கல்யாணமாகிவிட்டால் அப்பப்பா கேக்கவேவேணாம் மத்தளம்தான்.
அவனைகண்போல் காத்து வளர்க்கும் பெற்றோர் அவனுக்கு கல்யாணம் ஆனதும் கலங்கவைத்துபார்ப்பதுதான் விந்தை..
பெண்குழந்தை பிறந்தால் வருத்தப்படும் உலகம்.ஆண்குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுகிறது ஏன்? இதையறிந்தால் ஆண் மிகவும் வருந்துவான்
தான் எத்தனை சுமைகளை சுமந்துகொள்ளவேண்டும் என்பதை நினைத்து?[சுகமான சுமையென்பது வேறு. அதுவே சுமையிலும் சுமையாகிப்போனால்?] வளர்த்து ஆளாக்கி பணம் சம்பாதிக்கும் நேரத்தில்
பொதிசுமப்பது போலாகிவிடுகிறார்கள்.
அவனை படிக்கவைத்தோம் அதற்காக எவ்வளவு பாடுபட்டோம் அதனால் அவனும் பாடுபட்டுதான் எங்களை பார்த்துக்கொள்ளனும் என்பது சரியே! அதற்காக
நாம் ஆடம்பர வாழ்க்கை வாழவும்! ஊருக்காக பெயருக்காக வாழவும்! அவன் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பபை வீணடிக்கலாமா? அவன் முதுகிலேயே முழுபாரத்தையும் சுமத்தலாமா?
நிறைய இடங்களில் இப்படிதான் நடக்கிறது. நாம் பூமி வந்த நோக்கமென்ன என்பதையே மறந்து. மற்றவர்களுக்காக நம்மை நாமே மாற்றி. மாறுவேசம்போட்டு அவர் செய்யும்போது நாம செய்யாமலிருந்தால் நம்ம அந்தஸ்து என்னாவது என கடனை உடனைவாங்கி ஆடம்பரத்தில்
ஆட்டம் ஆடிவிட்டு. ஆடிமுடியும்போது அன்றாட வாழ்க்கையே ஆட்டம்கண்டிருப்பதை அறிந்ததும் அழுது புலம்பியென்ன லாபம்?
வெளிநாடு போய்விட்டால் என்னவோ அங்கு ரோட்டில் கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளிஅனுப்பியதுபோல் சிலவுசெய்யும் தாய்தந்தையரும் சரி மனைவிமக்களும்சரி. அதை அங்கு எப்படி சம்பாதிக்கிறான் எந்தளவு கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் அறியமறுக்கிறார்கள்.
அவர்களுக்குவேண்டியெதெல்லாம் அடுத்தவர்கள் நம்மை தாழ்வாக நினைக்கக்கூடாது. அங்கு என்ன கஷ்டப்பட்டலென்ன? கடனைவாங்கியனுப்பினாலென்ன?. வட்டிக்குமேல் வட்டியானாலென்ன?
நாம்நினைத்தது நடந்தால் போதும்.
இதற்கு வழிகாட்டியார்? தாய் தந்தையா? அல்லது மனைவி மக்களா?
இல்லை ஊர் உலகமா? இல்லை நீங்களேவா? ஏனென்றால் நீங்கள் படும் கஷ்டங்களை மறைத்து பெருமையாக காட்டிக்கொள்ளும்போது அங்கிருப்பவர்களுக்கு அது புரியாதே? அதை உணர்த்தவறுவது உங்கள் தவறில்லையா? தவறை நீங்கள் செய்துவிட்டு பின் கஷ்டங்கள் வரும்போது அவர்களைகுறைசொல்லி லாபமில்லையே! சரி அது எதுவென்றபோதும் நாம் நம்மை சரிசெய்துகொள்ளவேண்டாமா? நம்மால் இதைதான் செய்யமுடியும் என எதற்கும் ஓர் வரையரை வகுத்துக்கொள்ளுதல் வேண்டாமா? நம் சக்திக்கு மீறி எதைசெய்தாலும் அது நம்மை பாதிக்கும் என்ற எண்ணம்
கொள்ளவேண்டாமா? ஆடம்பரத்தின்பின்னே போனால் அதனால் பின்பு கஷ்டப்படுவது யார்?சிந்திக்கவேண்டாமா?
நம் தாயாகட்டும் தந்தையாகட்டும் நம் மனைவியாகட்டும் மக்களாகட்டும்.
அவர்கள் சொல்லும் சொல்லிலோ செயலிலோ இறைவனின் வாக்குகளைமீறி
இறைவேதம் சொன்ன வழிகளைமீறி உலகவாழ்க்கைக்காக தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும் அதுவும் அடுதவர்களுக்காக என நினைத்தால் அதை தடுத்துவிடுங்கள். நீங்களும் தவிர்ந்துக்கொள்ளுங்கள். இன்று அடுதவர்களுக்காக! ஊர் உலகத்துக்காக! இருக்கும் பணத்தையோ இல்லை அதற்க்குமீறி கடனை வாங்கியோ சிலவுசெய்து ஆடம்பரவாழ்க்கை வாழ்துவிட்டால்! நாளை சிரமமும் கஷ்டமும் சேர்ந்து வந்து உங்களை உலுக்கி எடுக்கும்போது.
அந்த அடுத்தவர்களோ ஊர் உலகமோ உங்களுக்காக ஒருபோதும் நிச்சியமாக உதவாது ஏன் ஏனென்றுகூடகேட்க்கமுன்வராது என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள் அதை அப்படியே மனதில் நிலைநிறுத்துங்கள்.இதுவே உலகவாழ்க்கையின் எதார்த்தம்.
விரலுக்கு தகுந்தார்போல் வீங்கினால்தானே வலி பொறுக்கமுடியும் அதற்குமேல்போனால் அல்லல்படவும் அவதிபடவும்தானே கூடும்.
நேரான வழியில் வரும் செல்வத்தை சீக்கிரம் சேமித்துக்கொள். அதை சிறுகச்சிறுக சிலவுசெய்யப்பழகு.
அதற்காக கருமித்தனமோ கஞ்சத்தனமோ செய்யாதே! எதையும் ஒரு எல்லைக்குள் உன் சக்திக்குள் செய்து வாழப்பார். அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையில் இல்லை இன்பம்
நமக்கா நாம் வாழும் வாழ்க்கையிலேயேதான் மகிழ்ச்சி தங்கும்
அதுவே உன் வாழ்கையை நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்,
உங்களைச் செல்வச்செழிப்போடு வாழ்நாள்முழுவதும் வாழச்செய்யும்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்வது மிகச்சுலபம், ஆனால் அதன்பின்னால் வரும் ஆபத்துகளை சமாளிப்பது மிக மிககடினம். ஆபத்து அழிவிலும் கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே எதையும் அளவோடு. நமக்காக நாம் வாழபழகிக்கொள்ளவேண்டும் அடுத்தவர்களுக்காக வாழ்ந்தால் அது நம் வாழ்க்கையல்ல.பிறர் மத்தியில் நாம் உயர்வாக இருக்க்வேண்டுமென்று எண்ணி இருப்பதையும் இழந்துவிடும் நிலையை தவிர்ந்துவிட்டு,
நம் எண்ணங்களை உயர்ந்ததாக சிறந்ததாக்கி கொள்ளவேண்டும். அதுவே நமக்கு நல்லவைகளை தானே கொண்டுவந்து சேர்க்கும் நம்மை உயர்த்தும்..
அன்புடன் மலிக்கா
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்